உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷாகிதி கான். இவர் கடந்த 2021 டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகருக்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் குழந்தை பராமரிப்பாளராக பணிக்கு சேர்ந்தார்.2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி வழங்கிய தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை ஷாகிதி கான் பராமரித்து வந்தார். இதனிடையே, 2022 டிசம்பர் 7ம் தேதி குழந்தைக்கு வழக்கமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினமே மாலை குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவத்தில் குழந்தையை ஷாகிதி கான் கொலை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரை 2023 பிப்ரவரி 10ம் தேதி அபுதாபி போலீசார் கைது செய்தனர். பின்னர், அல் வஹாப் சிறையில் அடைக்கப்பட்ட ஷாகிதி கான் மீது வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. மேலும், 2023 ஜூலை 31ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது ஷாகிதி கானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷாகிதி கானுக்கு பிப்ரவரி 15ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பாக பிப்ரவரி 28ம் தேதி ஐக்கிய அரபு அமீரக அரசு இந்திய அரசுக்கு கூறி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.