கனடாவின் புதிய பிரதமர் ஆகிறார் மார்க் கார்னி. கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னியின் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார். லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் பதவியேற்க இருக்கிறார். 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக மார்க் கார்னி பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவிகித வாக்குகளாகும்.இவரை எதிர்த்து போட்டியிட்ட கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (11,134 வாக்குகள்), கரினா கோல்ட் (4,785 வாக்குகள்), பிராங்க் பேலிஸ் (4,038 வாக்குகள்) பெற்றிருந்தது குறிப்பிட்டத்தக்கது.