கனடாவின் ரொறன்ரோ நகரில் (Toronto) உயர்தர வாகனங்களை திருடிய குற்றச்சாட்டில் எட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹால்டன் (Halton) காவல்துறை மற்றும் கிரேட்டர் ரொறன்ரோ பகுதி (GTA) அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசாரணையின் பின்னர், இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கொள்ளையர்கள் முக்கிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள ஹோட்டல்களின் வாகனத் தரிப்பிடங்களில் இரவு நேரங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு, ஜன்னலை உடைத்து வாகனத்திற்குள் பிரவேசித்து, அவற்றை திருடியுள்ளனர். பின்னர், ஜிபிஎஸ் (GPS) மூலம் கண்காணிக்க முடியாத வகையில் வாகனங்களில் மாற்றங்களை செய்து, அவற்றை "கூல் ஆஃப்" (Cool Off) பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, பின்னர் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். இந்த நடவடிக்கைகளின் மூலம், திருடப்பட்ட வாகனங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவது கடினமாகியுள்ளது. இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, மொத்தம் 90 குற்றச்சாட்டுகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என்பதையும், வாகன பாதுகாப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும் என்பதையும் காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர். மேலும், ஹோட்டல்களில் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது முக்கியம்.