தமிழ் புத்தாண்டின் விசேஷமிக்க இத்தருணத்தில் அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள எமது "தேடிப்பார்" வாசகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சி, வெற்றி மற்றும் அமைதியைத் தரட்டும். புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான எதிர்காலத்திற்கு "தேடிப்பார்" செய்தி குழுமம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. உலகின் பல பெருமைகளை கொண்ட தமிழ் மக்களால் புது வருட பிறப்பு சித்திரை மாதத்தில் சிங்கள மக்களாலும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த இனம்; என்ற பெருமைக்குரிய தமிழினம் ஆனது ஒவ்வொரு வருடமும் சித்திரை முதலாம் திகதியை வருடப்பிறப்பாக கோலாகலமாக கொண்டாடுவார்கள். இது இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் உலக தமிழர்கள், சிங்களவர்கள் இப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் ஆரம்ப காலங்களில் இருந்தே வானியர் ஜோதிடங்களில் சிறந்து விளங்கியதால் ஒரு தமிழ் ஆண்டு காலரீதியாக சிறப்பாக கணிப்பிடபடுகின்றது. சித்திரை மாதம் காலநிலை அடிப்படையில் வசந்த காலத்தின் ஆரம்பமாகும் இதனால் மக்கள் மகிழ்ச்சியோடு இப்புத்தாண்டை வரவேற்கின்றனர். தமிழர்கள் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தார்கள் இதனால் பண்டிகைகளை பருவகாலங்களுக்கு ஏற்ப கொண்டாடினார்கள். தமிழர்கள், சிங்களவர்களின் நாட்காட்டி 12 ராசிகளை அடிப்படையாக கொண்டதாகும் இதில் ராசிகளின் முதலாவதான மேட ராசியில் சூரியன் நுளையும் முதல் நாள் தமிழ், சிங்கள புதுவருடம் ஆகும். சித்திரை புத்தாண்டு பலவகையான சம்பிரதாயங்களை கொண்டதாகும். புத்தாண்டு ஆரம்பித்து விட்டால் வீடுகளில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. புத்தாடை வாங்குதல் மருத்துநீர் வைத்து நீராடல், இனிப்பு பண்டங்களை பரிமாறி கொள்ளல், பொங்கல் வைத்தல், கைவிசேடம் பெறுதல், சுபநேரத்தில் புதிய தொழில்களை ஆரம்பித்தல், பெரியவர்களிடம் ஆசி பெறுதல், பாரம்பரிய விளையாட்டுக்கள் வழிப்பாடுகளோடு மங்களகரமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடிக்கொண்டு தான் வருகின்றனர். இவ்வாறு சித்திரை புதுவருடத்துக்கென்று ஓர் தனித்துவமான மரபு இருந்தாலும் காலம் மாற மாற நவீன உலகின் கலாச்சாரங்கள் வளர்ச்சியடைய பல சாதகமான விடயங்களும் சில பாதகமான விடயங்களும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அது மட்டும் அல்லாமல் சில சமயங்களில் கொண்டாட்டங்களின் முறையும் மாற்றம் அடைந்து கொண்டு தான் இருக்கின்றன. தற்காலத்தில் கொண்டாட்டங்களில் உணவு, உடை மற்றும் ஏனைய எல்லா விடயங்களிலும் ஆடம்பரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு ஆடலும் பாடலும் சில களியாட்ட நிகழ்வுகளுமாய் இடம் பெறுகின்றன. தற்காலத்தில் புத்தாண்டானது வீட்டுக்குள்ளே தொலைப்பேசி வாழ்த்துக்களுடனும் தொலைக்காட்சி முன்னுமே கொண்டாடப்படுகின்றது. தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், கல்வி, வங்கித்தொழில், வர்த்தகம் போன்ற துறைகளில் அதிகளவான உற்பத்தி நிறுவனங்கள் தன் உற்பத்தியை கூட்டிக் கொள்வதற்காக மூன்றாம் உலக நாடுகளில் அதிகம் செயற்பட்டு வருகின்றன. இது போலவே தான் மதுசார உற்பத்தி நிறுவனங்களும் பல தந்திரோபாயங்களை பயன்படுத்தி வந்தமையால் இப்போது எம்மால் முழு மகிழ்ச்சியோடு கூட புத்தாண்டை கொண்டாட முடியவில்லை. இது மாத்திரம் அல்லாமல் புத்தாண்டினால் அடையும் மகிழ்ச்சி சில குடும்பங்களிலும் எமது பிரதேசத்திலும் சில நேரங்களில் இல்லாமலே போகின்றது. இதனை சற்று ஆராய்ந்து பார்த்தால் தற்காலத்தில் எமது பிரதேசத்தில் பரவி இருக்கும் எல்லோராலும் நம்பப்படும் போலியான ஓர் கருத்து தான் எந்த ஓர் கொண்டாட்டம் வந்தாலும் அதில் சாராயம் குடித்தால் தான் மகிழ்ச்சி வருகின்ற விருந்தினருக்கு சாராயம் கொடுத்தால் தான் கௌரவம், கொண்டாட்டம் முழுமைப்பெறவும், உற்சாகமாக இருக்கவும் சாராயம் குடிக்க வேண்டும் போன்ற பல்வேறு கருத்துக்கள் எம் சமூகத்தில் இருந்து கொண்டுதான் வருகின்றன இவ்வாறன கருத்துக்களின் உண்மை தன்மையை சற்று சிந்தித்து பார்ப்போம். புத்தாண்டு தினத்தன்று சாராயம் குடித்து விட்டு இருக்கும் ஒருவரின் குடும்பத்தின் நிலை எவ்வாறு இருக்கும்? எல்லோரும் சமூகத்தில் பார்க்க கூடிய ஒன்றுதான், சாராயம் குடித்தவர்கள் சுயநினைவு இல்லாததைப் போல நடிப்பதால் குடும்பங்களிலும் சமூகத்திலும் வன்முறைகள், வாக்குவாதங்கள், தொல்லைகள் என்பன ஏற்படுவதோடு சாராயத்தில் தான் மகிழ்ச்சி இருக்கின்றது என்று ஏமாந்து அவர்கள் தினமும் உழைக்கும் பணத்தினை இவ் பொருளாதார நெருக்கடி காலத்திலும் தன்னுடைய பிள்ளைகளுக்காகவும் மனைவிக்காகவும் நன்மைத் தரக் கூடிய அதாவது போசாக்கான உணவுகள், அழகிய உடைகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு செலவிடாமல் சாராய கம்பனிகளுக்கு தன் வியர்வை சிந்தி உழைத்தப் பணத்தினை கொடுக்கின்றனர். அது மட்டுமா நடக்கின்றது இல்லை, குடும்பத்தினரின் ஆசை என்ன? புத்தாண்டன்று வீட்டு தலைவனுடனும் வீட்டாருடனும் சிரித்து பேசி, ஒன்றாய் உணவு உண்டு, நகைச்சுவை கதைகள் சொல்லி காற்றோட்டமாய் பொடிநடைப்போடுவதோடு புத்தாண்டு திரைப்படங்கள் பார்த்து மகிழ வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் வீட்டு தலைவன் சாராயம் குடித்து விட்டு இருப்பதால் தூங்க மூஞ்சிக்காரர்களாக எந்த செயற்பாட்டிலும் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பார்கள் இதனால் பிள்ளைகளின் ஆசை உடைக்கப்படுகின்றது. இவ்வாறு சாராயம் குடித்துவிட்டு இருப்பவர்களினால் புத்தாண்டிற்கான சுவாரசியமும் மகிழ்ச்சியும் குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும் இல்லாமல் போய் மன உளச்சல், சோகம், வெறுப்பு என்பன ஏற்படுகின்றது. இவை அனைத்தும் நடைமுறையில் உள்ளவையே. இவ்வாறான நிலையினை வெற்றிக்கொள்வதற்கு | மதுசாரம் குடிப்பவராக இருந்தால் | • சாராயத்தில் சந்தோஷம் இருக்கின்றது என்றால் சாராயம் குடித்த பின் அசௌகரியமாக இருப்பது ஏன்? • சாராயம் குடிப்பதால் யாருக்கு சந்தோஷம் ஏற்படுகின்றது? • சாராயம் குடிக்கும் பொழுது சாராயத்திற்கு செலவிடுகின்ற பணத்தில் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றதா? இல்லையா என சற்று சிந்தித்து பார்த்தல். • பிள்ளைகளுக்கும் மனைவிக்காகவும் பணத்தினை அதிகம் செலவழித்து மதுசார கம்பனிகளுக்கு குறைவான பணத்தினை கொடுத்தல். பெண்களாக இருந்தால் • குடிப்பதினால் ஏற்படும் நஷ்டத்தினை கணவனுக்கு எடுத்து கூறல். • சாராயம் குடிப்பதால் குடும்பத்தில் சுமூகமான உறவை ஏற்படுத்தி கொள்ள முடியவில்லை என வெளிப்படையாக கூறல். • சாராயத்தில் சந்தோஷம் இல்லை என கணவனுக்கு அன்பாக எடுத்து கூறல். பிள்ளைகளாக இருந்தால், • அப்பா சாராத்துக்கு செலவிடும் பணத்தினை கணக்கு போட்டு காட்டல். • சாராயம் குடிப்பத்துவிட்டு வருவதால் பிள்ளைகளுக்கு ஏற்படும் தொல்லைகள்> பிரச்சினைகள்> வாய் நாற்றங்கள், மகிழ்ச்சி இல்லாமல் போவது தொடர்பாக கூறலாம். சமூகத்தில் ஒருவராக இருந்தால், • புத்தாண்டு நிகழ்வுகளில், விளையாட்டுப் போட்டிகளில்> களியாட்டங்களில் இளைஞர்கள் கூடும் இடங்களில் மதுசாரத்தின் கவர்ச்சியை குறைக்கும் விதமான செயற்பாடுகளை செய்தல். • சமூக வலைத்தளங்களில் மதுசாரத்தின் கவர்ச்சியை குறைக்கும் சில பதிவுகளை பதிவிடுதல். • சாராய கம்பனிகளின் தந்திரோபாயங்கள் தொடர்பாக கோவில்கள், பொது நிகழ்வுகளில் கூறுதல். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலமாக மகிழ்ச்சியான ஓர் புத்தாண்டினை எம்மாலும் கொண்டாட முடியும். சிந்தித்து செயற்பட்டு சித்திரையே வா வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா என்று சொல்லி சித்திரையை அழைப்பதோடு மங்கா புகழுடைய தமிழ் புத்தாண்டும் அதன் விழுமியங்களும் என்றும் உலகுக்கு முன்னோடியாக இருக்க நாமும் அவற்றின் பெருமையை உலகறிய செய்ய பண்டிகைகளையும் அவற்றின் ஆழமான கருத்துக்களையும் உணர்வோம் தலைமுறை தாண்டியும் வாழ வைப்போம்.