நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கனடா பிரதமர் மார்க் கார்னி, கடந்த மார்ச் 23 அன்று நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், கனடா நாட்டின் நாடாளுமன்ற ஹில்ஸின் கிழக்குத் தொகுதிக் கட்டிடத்திற்குள் மர்ம ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அவர் அன்றிரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்தார். அடுத்த நாள் காலை வழக்கம் போல் பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்து சென்ற போது, மர்ம நபர் உள்ளே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து கிழக்குத் தொகுதி கட்டிடத்திற்குள் இருந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது ெசய்து விசாரித்தனர். அந்த நபரை பிடிக்கும் போது, அவர் தப்பியோட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அத்துமீறி நுழைந்தவர் யாரையும் தாக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் ஆயுதங்கள் ஏதேனும் இருந்தனவா? என்பது குறித்துத் தகவல் இல்லை. அவர் யார், எப்படி உள்ளே நுழைந்தார், அவரது நோக்கம் என்ன, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.