தமிழ் வேட்பாளர் தேர்தல் பதாதைகள் சேதம்: மார்கம்-தார்ன்ஹில் தொகுதியில் ஒருவர் கைது!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

மார்கம்-தார்ன்ஹில் தொகுதியில் நடைபெறவுள்ள பெடரல் தேர்தலை முன்னிட்டு, கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் தமிழ் நபர் லயனல் லோகநாதனின் பிரச்சார பதாதைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், அலெக்ஸ் கெர்லி என அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) இரவு பதாதைகளை சேதப்படுத்தும் போது வீடியோவில் பதிவாகியிருந்தார். இந்த வீடியோவை லயனல் லோகநாதன் தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரின் பிரச்சார அலுவலகத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு, தகவல் காவல்துறையிடம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். லயனல் லோகநாதன், தனது பதாதைகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுவதாகவும், இதில் லிபரல் மற்றும் என்.டி.பி கட்சி ஆதரவாளர்கள் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் தெரிவித்துள்ளார். தற்போது தேர்தலுக்கு குறைவான நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இது முக்கியமான விவகாரமாகவே கருதப்படுகிறது. தேர்தல் பிரச்சார பதாதைகளை சேதப்படுத்துவது தேர்தல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். கைது செய்யப்பட்ட நபர்மீது குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் இந்தப் போன்ற சம்பவங்களை கவனித்தால் உடனடியாக அதிகாரிகளிடம் தகவல் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts