இலங்கையில் உள்ள பௌத்த பிக்குகள் குழுவும், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட குளோபல் தமிழ் மன்றமும் இணைந்து முன்னெடுத்த சர்ச்சைக்குரிய "இமலாய பிரகடனம்" முயற்சிக்கு சுவிஸ் அரசு நிதியுதவி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னணி சட்டத்தரணியும், முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சத்குணநாதன் இதனை விமர்சித்துள்ளார்.
குறித்த முன்னெடுப்பு இலங்கை மற்றும் வெளிநாட்டில் உள்ள தமிழ் சமூகத்தினர் மத்தியில் கோபத்தை சம்பாதித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரச பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நீதி கேட்டு கடுமையாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த பிரகடனம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த பிரகடனம் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் இழைக்கப்பட்ட பாரதூரமான போர்க்குற்றங்கள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறையைப் பற்றிப் பேசவில்லை.
சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதத்தின் தாக்கத்தை தமிழர்களும் முஸ்லிம்களும் சமூக பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் பாதிக்கும் காரணியாக இனங்காணுகின்றோம்.
இருந்த போதிலும் சமூகங்களுக்கிடையிலான உறவுகளில் சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதத்தின் தாக்கத்தை தவிர்க்க வேண்டும் என அம்பிகா சத்குணநாதன் கூறினார்.
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய பிரகடனத்திற்கு கொழும்பில் உள்ள சுவிஸ் தூதுவர் அல்லது ஜெனிவாவில் உள்ள அரசு எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.