அயோத்தியில் பிரம்மாண்ட விழா... ராமர் சிலையைத் திறந்து வைத்தார் மோடி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதற்காக கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வந்தார். 

 அத்துடன் நாட்டில் உள்ள முக்கிய தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தார். கும்பாபிஷேக விழா இன்று காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது. நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பிரபல கலைஞர்கள் பங்கேற்று தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிககளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைத்தனர்.

கருவறை அருகே உள்ளே வந்த மோடியுடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் அமர்ந்தார். மோடி சங்கல்பம் செய்து கொண்டார். சரியாக 12.20 மணிக்கு கோயிலின் கருவறைக்குள் நுழைந்த மோடி மற்றும் மோகன் பகவத் இருவரும் குழந்தை ராமர் சிலையின் எதிர்புறம் அமர்ந்து அங்கு நடைபெற்ற பூஜைகளில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யும் பூஜைகள் நடைபெற்றது. அங்கு கோயில் பூசாரிகள் கூறிய மந்திரங்களை பிரதமர் மோடியும், மோகன் பகவத்தும் உச்சரித்தனர். பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் மோடி தனது கையில் இருந்த பூக்களை ராமர் பாதத்தின் மீது தூவி பிரதிஷ்டை பணிகளை நிறைவு செய்தார். அவருடன் மோகன் பகவத் மற்றும் கோயில் பூசாரிகள் ராமர் பாதத்தில் பூக்களைச் சமர்ப்பித்தனர்.

இதன்மூலம் குழந்தை ராமர் சிலை பக்தர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. குழந்தை ராமரின் சிலையின் கால்களை தொட்டு வணங்கி மனமுருக பிரதமர் மோடி வேண்டிக் கொண்டார்.

Related Posts