பாலஸ்தீனத்தின் வடக்கு பகுதியில் வான்வழியாக மனிதாபிமான உதவிகள் வழங்கிய போது ஏற்பட்ட பாராசூட் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"விபத்தில் காயமடைந்தவர்கள் காசாவின் அல் ஷிஃபா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கோர விபத்து கடலோரத்தில் உள்ள அல் - ஷாதி அகதிகள் முகாமுக்கு அருகில் நடந்தது" என்று மருத்துவமனையின் தலைமை செவிலியர் முகம்மது ஷேக் தெரிவித்தார்.
விபத்து குறித்து நேரில் பார்த்த சாட்சியான முகம்மது அல் கோல் கூறுகையில், "நானும் எனது சகோதரனும் மாவு பொட்டலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வானத்தில் இருந்து கீழிறங்கிய பாராசூட்களை பின்தொடர்ந்து கொண்டிருந்தோம். அப்போது திடீரென பாராசூட்கள் திறக்காமல், அங்கிருந்த வீட்டின் கூரை மீது ராக்கெட் வேகத்தில் விழுந்தன.
பத்து நிமிடங்கள் கழித்து உதவி பொருள்கள் விழுந்த கூரை வீட்டில் இருந்து உயிரிழந்த மூன்று பேரையும், காயமடைந்தவர்களையும் இடம் மாற்றுவதை பார்த்தேன்" என்று தெரிவித்தார்.