இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் கலபகோஸ் வகை ராட்சத ஆமை தனது 125-வது வயதில் உயிரிழந்தது.
சாணக்யா என்று அழைக்கப்படும் இந்த ஆமை 1969ல் இந்த பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த பூங்காவில் வசிக்கும் மிகவும் வயதான ஆமையாக இருந்தது. கடந்த 10 நாட்களாக சாணக்யா ஆமை உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உருளைக்கிழங்கு மற்றும் கீரை வழங்கப்பட்ட போதிலும், 10 நாட்களாக சாப்பிடவில்லை என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை சாணக்யா ஆமையின் கூண்டை சுத்தம் செய்த உயிரியல் பூங்கா ஊழியர்கள், அது இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆமை உயிரிழந்தது பூங்கா ஊழியர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. பல உறுப்புகள் செயலிழந்ததால் ஆமை உயிரிழந்ததாக முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.