தைவானில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 730 பேர் படுகாயமடைந்தனர்.
தைவான் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் தைவானின் கிழக்கு நகரான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.
நிலநடுக்கம் காரணமாக, தைப்பேவில் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதிகாலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கம் எதிரொலியாக மக்கள் அலறியடித்து, பாதுகாப்பான இடங்களைத் தேடி தஞ்சம் அடைந்தனர். சாலைகளில் கார்கள், டூவீலர்கள் உள்ளிட்டவற்றில் செல்லும்போது நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாலங்களும் அதிர்வால் குலுங்கின.
தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது தான் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 ஆக பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டது.
வீடியோ இணைப்பு: https://twitter.com/ANI/status/1775346474777444424