நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல் மீதான் ஈரானின் தாக்குதல் நடந்திருக்காது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இப்படி நடக்க கண்டிப்பாக அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது. நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
இன்று (ஏப்.14) அதிகாலை இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது.
ஜெருசலேம் நகரின் சில இடங்களில் பயங்கர சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முன்னதாக சிரியாவின் டமாஸ்கசில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் இஸ்ரேல் மீது கடுங்கோபத்தில் இருந்தது.
இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது. (P)