கனடா TGTE தேர்தல் ஆணையகம் முறைகேடாக செயல்படுகின்றதா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) என்பது புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பாகும். 

 2010ல் ஸ்தாபிக்கப்பட்ட TGTE ஆனது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் நலன்களுக்காகவும் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்க ன நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சுயநிர்ணயம் ஆகியவற்றை நோக்கி செயற்படுகிறது. 

 TGTE தனது முதல் தேர்தலை மே 2010 இல் நடத்தியது. முதல் பாராளுமன்றம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதலாம் ஆண்டு நினைவு நாளான மே 18, 2010 அன்று அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தில் உள்ள சுதந்திர மண்டபத்தில் கூடியது. 

 அதன் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை TGTE பன்னிரண்டு நாடுகளில் தேர்தலை நடத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து வருகின்றது. தற்போது நான்காவது பாராளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் மூலம் 12 நாடுகளில் இருந்து 115 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். 

மே மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் கனடாவிலிருந்து 25 உறுப்பினர்கள் தெரிவாக உள்ளனர். கனடாவில் இந்த தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த பலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் முன்னாள் அமைச்சர்களது வேட்பு மனுக்களும் அடங்குகிறது. 

இம்முறை தேர்தல் ஆணையம் வரம்புகளை மீறி செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அரசியலமைப்பு விதிகளில் குறிப்பிடப்பட்ட கூறுகளை மீறி வேட்பாளர் தெரிவு நடந்துள்ளது. ஒரு வேட்பாளர் குற்றபின்னணி கொண்டவரா? அரசியல் ஆதாயம் தரும் பதவியில் உள்ளாரா? என்பது போன்ற விவரங்களை ஆய்வு செய்வது தான் தேர்தல் ஆணையத்தின் பணி. 

 கனடாவில் இந்தமுறை நிரகாரிக்கப்பட்ட வேட்பாளர்களை அரசியலமைப்பு விதிகளை மீறி தேர்தல் ஆணையம் கையாண்டு இருக்கிறது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் நடத்த வேண்டிய இடத்தில் வெறும் 7 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படவுள்ளது. மிகுதி இடங்களை தேர்தல் ஆணையமே தீர்மானித்துள்ளமை ஒட்டுமொத்த ஜனநாயகத்தை மீறும் செயலாகவே பார்க்கப்பட்டு TGTE மீதான நம்பிக்கையை இழக்கச்செய்துள்ளது. 

 தேர்தல் ஆணையத்துக்கு சாதகமானவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது. தமது வேட்புமனுவை நிராகரிக்க குறிப்பிட்ட விடயங்கள் எவையும் வேட்பாளர் தகமையில் இல்லாதவை என நிராகரிக்கப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்கள். TGTE கனடிய தேர்தல் ஆணையகம் அமைச்சரவை அல்லது பிரதமர் பணிமனையால் இயக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

 கனடாவுக்கான தேர்தல் ஆணையகம் கலைக்கப்பட்டு, புதிய ஆணையாளரை நியமித்து, மீண்டும் கனடாவுக்கான தேர்தலை நடத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேர்மையை காக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. TGTE கனடிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஊடக சந்திப்பு நேற்று முன்தினம் ZOOM ஊடாக நடைபெற்றது. இதில் கனடிய தேர்தல் ஆணையாளர் சிவபாலன் பாலசுந்தரம் மற்றும் 4 உதவி ஆணையாளர்கள் கலந்துகொண்டனர். 

 இந்த ஆணையகத்தில் ஊடக தொடர்பாடலராக இருக்கும் ஒருவர் தன்னை முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் போராளி என அடையாளப்படுத்தி அரசியல் துறை என்ற அமைப்பில் பொறுப்பு நிலையில் உள்ள ஒருவராவார். இவர் கூறும்பொழுது தகுதிநீக்கம் செய்யப்பட்ட்டவர்கள் TGTE யாப்பின்படி பல விதிகளின் கீழ் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக கூறினார். பல விதி இலக்கங்களையும் குறிப்பிட்டார். 

 TGTE 2013 இறுதியாக வெளியிட்ட யாப்பில் ஒரு வேட்பாளர் குற்றபின்னணி கொண்டவரா? அரசியல் ஆதாயம் தரும் பதவியில் உள்ளாரா? என்ற பதங்களை தவிர வேறெந்த தகமையும் அதில் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குறிப்பிட்ட எந்த இலக்க விதிகளும் அந்த யாப்பில் பொதுவெளியில் இல்லை. 

இன்னொரு அரசியல் அமைப்பில் இருக்கும் ஒருவர் TGTE தேர்தல் ஆணையகத்தில் இடம்பெறலாமா என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு TGTE யாப்பில் அப்படி எதுவும் தடையில்லை என பதிலளிக்கப்பட்டது. 

 TGTE கனடிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஊடக ZOOM கலந்துரையாடலில் பங்குகொண்ட தேடிப்பார் குறித்த சந்தேகங்களை உறுதி செய்துள்ளது. கனடிய தேர்தல் ஆணையக ஊடக சந்திப்பும் அவர்கள் விளக்கங்களும் திருப்திகரமாக அமையவில்லை.

இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுக்க ஈரான் தயார் | Thedipaar News

Related Posts