திருமண வரவேற்பு விழாக்களில் வரவேற்கும் பெண்ணாக தனது பயணத்தை தொடங்கிய சமந்தா இன்று எங்கேயோ சென்றுவிட்டார். பலருக்கும் முன் உதாரணமாக உள்ளார். அதுமட்டுமா? நடிகை மட்டும் அல்லாது பல தொழில்களை செய்து தொழில் அதிபராகவும் உள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதையும் வென்று இன்று தான் எதற்கும் ஓய்ந்து ஒடுங்கிவிட மாட்டேன் என்பதை நிரூபித்துவிட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நான்கு ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு இருவரும் தங்களுடைய விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களுடைய பிரிவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
விவாகரத்து சமயத்தில் நாகசைதன்யா குடும்பத்தில் இருந்து நடிகை சமந்தாவிற்கு ரூ. 250 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்துள்ளனர் என்ற செய்தி உலா வந்துள்ளது. இந்த செய்தி பொய் என ஒரு தரப்பு கூறினாலும் மற்றொரு தரப்பு குறிப்பாக சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள் இந்த செய்தி உண்மை தான் என்கிறார்கள். இதனை பற்றி பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா, ரூ. 250 கோடி ஜீவனாம்சம் கொடுப்பதாக கூறி ஒரு செய்தியை தூங்கி எழுந்தபின் பார்த்து வருத்தப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் எப்போது வருமான வரித்துறையினர் வந்து கேட்டாலும் என்னிடம் எதுவுமே இல்லை என அவர்களிடம் காட்டுவதற்காக காத்திருந்தேன் என நகைச்சுவையாக பேசியிருந்தார். தன்னுடைய வாழ்க்கையில் மனதளவிலும் சரி உடல் அளவிலும் சரி தான் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட அதை பொருட்படுத்தாமல் ஓய்வின்றி ஓடிக்கொண்ட இருக்கும் சமந்தாவின் வாழ்க்கை முறை பலருக்கும் முன் உதாரணமாக உள்ளது.