குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்பட 49 பேர் பலி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குவைத்தில் இயங்கி வரும் பிரபலமான என்.பி.டி.சி. என்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

6 மாடிகளை கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200 பேர் தங்கியிருந்தனர். தொழிலாளர் முகாம் என அழைக்கப்படும் அந்த பகுதியில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு போன்ற தென்னிந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.மளமளவென பரவிய இந்த தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும், மாடிகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அதிகாலை நேரம் என்பதால் பலரும் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்கள் தூக்கத்திலேயே உடல் கருகினர். அதேநேரம் புகை மூட்டம் காரணமாக பலருக்கும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.இவ்வாறு உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பல தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதில் உடல் கருகியதை விட, மூச்சுத்திணறி இறந்தவர்களே அதிகம் ஆகும்.அதேநேரம் தீ விபத்து ஏற்பட்டதும் தப்பிக்க வழி தெரியாமல் மாடிகளில் இருந்து பலரும் கீழே குதித்தனர். இதனால் படுகாயம் ஏற்பட்டும் சிலர் உயிரிழந்தனர்.இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலமும், அலறல் சத்தமுமாக பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பிடித்த தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.அத்துடன் தீயில் கருகியும், மூச்சுத்திணறியும் உயிருக்கு போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர். 

அதைப்போல தீ பிடித்ததால் வெளியேற முடியாமல் ஆங்காங்கே சிக்கியிருந்தவர்களையும் உயிருடன் மீட்டனர்.நெஞ்சை உருக்கும் இந்த பயங்கர சம்பவத்தில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர்.

Related Posts