கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான காந்திபுரம் 100 அடி சாலையின் இரு புறங்களிலும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இதன் முன்பாகவே இரு புறங்களிலும் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டது. பாதாள சாக்கடை மூடிகள் சிதிலமடைந்து இருந்ததால் அவற்றை அகற்றிவிட்டு புதிய மூடிகள் பொருத்த திட்டமிடப்பட்டு இருந்தது. 10 நாட்களாக பாதாள சாக்கடை குழிகள் திறந்த நிலையில் இருந்தது.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்று மாலை அந்தவழியே நடந்த சென்ற இளம் பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென குழிக்குள் தவறி விழுந்தார். காலில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.