தமிழ் தேசிய இனத்தின் இருப்புக்காக.. வாக்களிப்போம் அறியநேத்திரனுக்கு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் தேசிய இனத்தின் இருப்புக்காக தமிழ் பொதுவேட்பாளர் பா. அறியநேத்திரனுக்கு வாக்களிப்போம்!

இலங்கைத்தீவில் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலை மையப்படுத்தி, தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ்பொதுவேட்பாளருக்கான தோழமையுடன் கூடிய ஆதரவினை புலம்பெயர் கனடா வாழ் தமிழ்த் தேசிய செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றோம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலத்தில் நமது செயற்பாடுகள் அனைத்துமே, தமிழ் மக்களுக்கான நீதி என்பதை இலக்காகக் கொண்டே இருந்தது. பாதிக்கப்பட்ட ஒரு இனத்திற்கான நீதியிலிருந்துதான் அந்த இனம் மீண்டு எழ முடியும் என்னும் அடிப்படையே நம் அனைவரையும் வழிடத்தியது. ஒரு இனமாக எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்திருக்கின்றோம். ஆனாலும் நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. நாம் இன்னும் அதிகமாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டியிருக்கின்றது. ஆனால் நாம் நமக்குள் தொடர்ந்தும் சிதறிக் கொண்டிருக்கின்றோம். ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் எங்களால் ஒன்றுபட்டு செயலாற்ற முடியவில்லை. 

ஒற்றுமை எப்போதும் எமக்குள் ஒரு ஏக்கமாகவே இருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் தாயகத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு உருவாகியிருக்கின்றது. ஒப்பீட்டடிப்படையில் அதிகளவான சிவில் சமூக அமைப்புக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர் சமூகம், அநேகமான தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரணியாக ஒன்று பட்டிருக்கின்றனர். அதன் அடையாளமாக, வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்.

கட்சிகளாகவும், குழுக்களாகவும், கட்சிகளுக்குள் அணிகளாகவும் பிளவுற்றிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் சூழலில், தமிழ்ப் பொது வேட்பாளர் என்னும் அடையாளம் நம் அனைவரையும் ஒன்றுபடுத்தியிருக்கின்றது. கடந்த பதினைந்து வருடகால தமிழ்த் தேசிய அரசியல் சூழலில், நாம் அதிகம் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான களத்தை தமிழ் பொது வேட்பாளர் சாத்தியப்படுத்தியிருக்கின்றார். இதனை பற்றுதியுடன் பற்றி பிடிப்பதன் மூலமாக மட்டுமே நாம் நமக்கா செயற்படவும் சர்வதேச சமூகத்தை நம்மை நோக்கித் திருப்பவும் இயலும். ஒரு இனப்படுகொலைக்கு ஆளான மக்கள் கூட்டமானது, தனக்கான நீதியை கோரும் உரித்துடையது. அதற்கான பொருத்தமான பொறிமுறைகளை கோரும் உரித்தும் அந்த மக்கள் கூட்டத்திற்குண்டு. பொருத்தமா தீர்வு பொறிமுறை என்பது இனஅழிப்புக்கு உள்ளன தமிழினம் தாம் விரும்பும் தீர்வை தாமே தீர்மானிக்கும் பொதுவாக்கெடுப்பாகும். தமிழ்ப் பொது வேட்பாளருக்கான, தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்த விடயங்கள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. 

இலங்கைத் தீவில் இடம்பெறுகின்ற ஒரு ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாறானதொரு தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கபட்டிருப்பது இதுதான் முதல் தடவை. இந்த விடயங்கள் தாயகத்திலுள்ள கட்சிகள் மத்தியிலிருந்து ஆணித்தரமாக முன்வைக்கப்பட வேண்டுமென்றே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். அப்போதுதான் களமும் புலமும் இணைந்து, ஒரு புள்ளியில் பணியாற்ற முடியுமென்றும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். அது தற்போது சாத்தியப்பட்டிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில், தமிழர் தாயகப் பகுதியில் தமிழ் பொது வேட்பாளரை நோக்கி நமது மக்களை அணிதிரட்ட வேண்டிய கடப்பாடு புலம்பெயர் சமூகமாகிய எங்களுக்குமுண்டு. அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டியிருக்கின்றது. நாம் ஒன்றுபட்டு, ஒரே குடையின் கீழ் பணியாற்றுவதற்காக காலம் நமக்கு தந்திருக்கும் அரிய சந்தர்ப்பமாகவே இதனை நான் பார்க்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தை நாம் அனைவரும் ஓரணியாக பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோளாகும். 

போரின் வடுக்களை சுமந்தவாறு நமது தலைமுறை ஒன்று அன்னிய தேசங்கள் எங்கும் சிதறிக் கிடக்கின்றது. சிதறிக்கிடக்கும் நாம் ஒரு அரசியல் சக்தியானால் நமது குரலை உலகம் கேட்டேயாக வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்த முடியும். நாசிகளின் கொடுமைகளால் உலகெங்கும் சிதறிய யூதஇனம் கனவுகளை சேமித்துக் கொண்டு தனக்கான வாய்ப்புக்களுக்காக செயலாற்றியது. இன்று நிமிர்ந்து எழுந்திருக்கின்றது. இது நம்மாலும் முடியும் - ஆனால் அதற்காக நெடுந்தூரம் நாம் பணியாற்ற வேண்டும். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் உச்சபட்சமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமது ஒவ்வொரு செயற்பாடுகளினதும் சரி பிழைகளை பரீசீலித்து முன்னோக்கிச் செயற்படுவதற்கான வலுவான கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

நமது கட்டமைப்புக்களுடன் அடுத்த தலைமுறையினரை இணைக்க வேண்டும். முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான பதினைந்து வருடங்களில் நம்மால் அதிகம் இந்த விடயங்களை நோக்கிப் பயணித்திருக்க முடியவில்லை. நாம் பல வழிகளில் சேர்ந்தும், தனித்தும் முயற்சித்திருக்கின்றோம் ஆனால் நமக்குள் முதன்மைப் படுத்தப்பட்ட பிளவுநிலை வாதங்கள் கடந்த காலம் தொடர்பான பார்வைகள் நம்மை இணைப்பதற்கு பதிலாக அதிகம் பிரிப்பதாகவே இருந்தது. ஆனால் இப்போது அவற்றையெல்லாம் புறம்தள்ளி புதுப் பொலிவுடன் எழுச்சி கொள்ள அனைவரும் ஓரணியாக செயலாற்றுவதற்கான களத்தை தமிழ் பொது வேட்பாளர் தந்திருக்கின்றார். 

தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தில் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பாக ஒன்றுபட்டிருப்பவர்கள் நம்மை அணுகுகிய முறையில் நமக்கு சில அதிருப்திகள் இருக்கலாம். ஆனால் இந்த விடயத்தில் ஏற்படும் விளைவுகள் நம் அனைவருக்கும் உரியது. எனவே தமிழ் பொது வேட்பாளர் என்னும் தேரை ஊராகக் கூடி இழுக்க வேண்டிய கடப்பாடு இப்போது நம் அனைவருக்குமுரிய கடப்பாடாக மாறியிருக்கின்றது. தமிழ் பொது வேட்பாளரின் வெற்றி நம் அனைவரதும் வெற்றியாகும் - அது தோல்வி எனின் அது நம் அனைவரதும் தோல்வியாகும். எனவே அன்புக்குரிய செயற்பாட்டாளர்களே, நண்பர்களே ஊர் கூடித் தேர் இழுப்பதற்காக கரம் கோர்க்குமாறு தோழமையுடன் வேண்டுகிறேன். 

தமிழ் தேசியக் கவி புதுவை அண்ணரின் கவி வரியொன்றுண்டு – "காலத்தை தவறவிட்டால் பின்னர் கண்டவரெல்லாம் கதவை தட்டுவார்" நாம் இந்த காலத்தை தவறவிட்டால் பின்னர் இவ்வாறானதொரு வாய்ப்பு பின்னர் வரும் வரையில் நாம் காத்திருக்க வேண்டி வரும் அதற்குள் பல விடயங்கள் நடந்தேறிவிடும். நாம் உலகிலிருந்து விடைபெறுவதற்கு முன் நமது அடுத்த தலைமுறையிடம் நமது அஞ்சல் கோலை கொடுக்க வேண்டும். 

தமிழ் பொது வேட்பாளர் என்னும் குறியீடு ஒரு தமிழ்த் தேசிய அஞ்சல் கோலாகும். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் உலகெங்குமுள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! தமிழர்கள் அனைவரும் சங்குச் சின்னத்துக்கு ஒற்றுமையாய் வாக்களிப்போம் 

நிமால் விநாயகமூர்த்தி 

தமிழ் பொது வேட்பளர் ஆதரவாளர்கள் சார்பாக 

கனடா

Related Posts