போட்டியின் போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மரணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பெரு நாட்டின் ஹுயாகயா மாகாணத்தில் உள்ள சில்கா மாவட்டத்தில் உள்ளூர் கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் அணிகளான ஜுவன்டெட் பெல்லாவிஸ்டா, ஃபேமிலியா சோக்கா ஆகிய அணிகள் மோதின.

போட்டி நடந்து கொண்டிருந்தபோது கருமேகங்கள் சூழ்ந்து மின்னல் வெட்டியது. அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வீரர் ஜோஸ் ஹுகோ டி லா குரூஸ் மெஸா என்ற வீரர் மீது மின்னல் தாக்கியது. அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். மின்னல் தாக்கியதால் மேலும் 5 வீரர்கள் காயமடைந்தனர்.

மின்னல் பாய்ந்ததும் கால்பந்து போட்டியாளர்கள் போட்டியை நிறுத்திவிட்டு காயமடைந்த வீரர்களை நோக்கி ஓடினர். அப்போது ஜோஸ் ஹுகோ டி லா அதே இடத்திலேயே உடனடியாக இறந்தது தெரியவந்தது. காயமடைந்த மற்ற 5 வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.

காயமடைந்தவர்களில் கோல்கீப்பர் ஜுவான் சோக்கா (40), கிறிஸ்டியன் சீசசர் பிடுய் காஹுவானா உள்ளிட்டோரும் அடங்குவர். மின்னல் தாக்கியதில் இவர்கள் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மின்னல் பாய்ந்ததால் போட்டி நிறுத்தப்பட்டு ஜுவான்டெட் பெல்லாவிஸ்டா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 22 நிமிடங்கள் மட்டுமே இந்த போட்டி நடைபெற்றது. 

இந்த சம்பவத்தால் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களும், போட்டியைப் பார்க்க வந்த ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். போட்டி நடந்த மைதானமானது கடல் மட்டத்திலிருந்து 10,659 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மழைக்காலத்தின்போது இங்கு அடிக்கடி மின்னல் தாக்கும் சம்பவங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts