மனநலம் குன்றிய சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தின் நிர்மாணப் பகுதிக்கு வந்த போதகர் ஜெரோமின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி மிப்பிட்டிய பிரதேசத்தில் மனநலம் குன்றிய சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையமொன்றை நிர்மாணிப்பதாகக் கூறி நிர்மாணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு போதகர் ஜெரோம் வந்த போதே இந்த நிலை ஏற்பட்டது.
கிராம மக்களுக்கும் போதகருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தை அடுத்து, நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.
இங்கு, சிறுவர்களுக்கான மறுவாழ்வு மையம் கட்டப்படும் எனக்கூறியிருந்தனர் எனினும், இந்த இடத்தில் மத வழிபாட்டுத்தலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இங்கு கட்டப்பட்டு வரும் கட்டுமானம் குறித்து எந்த அரசு நிறுவனத்திற்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம், என அனைத்துப் பிரஜைகளும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாகவும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் இவ்வாறானவர்களுக்கு நாவலப்பிட்டி பிரதேசத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளார்.
கிராம மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் போதகர் ஜெரோம் மற்றும் அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். (P)