அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருடைய மார் எ லாகோ வீட்டில் ரோபோ நாய் கண்காணிப்பில் இறங்கியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இரவு பகல் பாராது துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்போது ரோபோ நாயும் அங்கு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ட்ரம்ப் இல்லத்தின் காம்பவுண்டு சுவர் அருகே சுற்றி வரும் இந்த ரோபோ நாய் அங்கு சந்தேகத்திற்கு இடமான பொருள் எதாவது இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வருவது கவனிக்கத்தக்கது.
மார்-ஏ-லாகோவில் உள்ள ட்ரம்பின் வீட்டைப் பாதுகாக்க ரோபோ நாய் பயன்படுத்தப்படுவதை அந்நாட்டின் சீக்ரெட் சர்வீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையானது.
அதிபரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போதுமான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார். ட்ரம்பின் வீட்டை பாதுகாக்கும் இது ஆஸ்ட்ரோ என்ற ரோபோ நாய் என்று கூறப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ரோபோ நாய் சற்று தனித்துவமாக இயங்கக்கூடியது எனச் சொல்லப்படுகிறது.