நோர்த் யார்க் பகுதியில் கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஏழு தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலை 9:20 மணியளவில், எஸ்தர் ஷைனர் புல்வர்ட் (Esther Shiner Boulevard) மற்றும் மெக்மகான் டிரைவ் (McMahon Drive) சந்திப்பில் அமைந்துள்ள ஒரு கட்டுமான கட்டிடத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த வெடிப்பு கட்டிடத்தின் 22ஆம் மாடியில் உள்ள பென்ட்ஹவுஸ் மெக்கானிக்கல் அறையில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.
டொரொண்டோ தீயணைப்பு சேவையின் அதிகாரி பால் ஓபிரையன் கூறுகையில், “வாயு வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. சிலர் எரிகாயங்களுடன் இருந்தனர். ஆனால், எங்கள் குழு சம்பவ இடத்துக்கு வந்தபோது கட்டிடத்தில் தீயணைப்பு பணிகளுக்கு தேவையில்லை என்பது தெரியவந்தது,” என்றார்.
வெடிப்பில் பாதிக்கப்பட்ட ஏழு தொழிலாளர்களில், நான்கு பேர் தீவிர காயங்களுடனும், மூன்று பேர் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்துக்கு டொரொண்டோ தீயணைப்பு துறையிலிருந்து 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அனுப்பப்பட்டன. கட்டிடத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த வெடிப்பு சம்பவத்துக்கு காரணம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
