பாஜக அமைச்சரவையில் இருந்து பதவி சுகம் அனுபவித்த திமுகவினர், நான் ரஜினியைச் சந்தித்தால், சங்கி என்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் மோடியை சந்தித்தபோது அவர்களை சங்கி என்று சொல்லவில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ரஜினியை அழைக்கும் போதும், அவரை வைத்து படம் எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் போதும் அவர் சங்கியாகத் தெரியவில்லையா? நாங்கள் இருவரும் சந்தித்ததில், திமுகவுக்கு ஒரு நடுக்கம் இருக்கிறது.
அதனால் சங்கி என்று பேச வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் எனக்கு காவி உடை போட்டு, ரஜினியுடன் இருக்கும் படத்தை வெளியிடுகிறார்கள். இதை திட்டமிட்டு செய்வது திமுக தான். வேறு மரத்திற்கு காவி கட்டலாம். ஆனால், நான் வைரம் பாய்ந்த பனைமரம். எனக்கு காவி கட்ட முடியாது.
துளசிதாசர் ராமாயணத்தை இந்தியில் எழுதும் போது, ராமனின் நண்பன் அனுமான் என்பதற்கு சங்கி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். சங்கி என்றால் தமிழில் நண்பன் என்ற ஒரு பொருள் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக எங்களை திராவிடன் என்று சொல்லி கேவலப்படுத்துவதை விடவா, சங்கி என்ற சொல் கேவலமாகி விட்டது?
ரஜினியின் மகள் சவுந்தர்யா, “என் அப்பாவை சங்கி என்று சொல்லாதீர்கள்” என்று முன்பு வருத்தப்பட்டபோதே, “சங்கி என்றால் நண்பன் என்று கூட ஒரு பொருள் உள்ளது. எனவே வருத்தப்படாதீர்கள்” என்று சொல்லி இருக்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.