டிசம்பர் 29ம் தேதி தென்கொரியாவின் முவான் நகர சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 181 பேரில் 179 பேர் உயிரிழந்தனர். 2 விமான ஊழியர்கள் மட்டும் உயிர் தப்பினர்.
விமானத்தின் முன்பகுதி இருக்கைகள் பிசினஸ் கிளாஸ் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இருக்கைகளுக்கான கட்டணம் அதிகம். பின் பகுதி இருக்கைகள் எக்னாமிக் கிளாஸ் என்று அழைக்கப்படுகிறது.
இதற்கான கட்டணம் குறைவு.
பெரும்பாலும் பின்பகுதி இருக்கைகளை பயணிகள் விரும்புவது கிடையாது. கழிவறை, அவசர கால இருக்கை, கால் வைக்க போதுமான இடமின்மை உள்ளிட்ட காரணங்களால் பின் இருக்கைகளை பயணிகள் வெறுக்கின்றனர்.
ஆனால் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ளும்போது விபத்தின்போது முன்இருக்கை பயணிகள் உயிர்பிழைக்க 49 சதவீதம் மட்டுமே வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. அதேநேரம் நடுப்பகுதி பயணிகள் உயிர் பிழைக்க 59%, பின்இருக்கை பயணிகள் உயிர்பிழைக்க 69 % வாய்ப்பு இருக்கிறது.
தென்கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில், வால் பகுதியில் கழிவறை அருகே கடைசி இருக்கைகளில் அமர்ந்திருந்த ஜேஜு ஏர் கோ விமான நிறுவனத்தின் ஆண் ஊழியர் லீ மோ (33), விமான பணிப்பெண் குவான் கு (25) ஆகியோர் மட்டுமே உயிர் பிழைத்து உள்ளனர்.
விபத்துக்குள்ளான போயிங் 737-800 ரக விமானத்தின் அனைத்து பாகங்களும் தீயில் எரிந்து உருக்குலைந்துவிட்டன. ஆனால் வால் பகுதி மட்டும் சேதமடையவில்லை. இதன்காரணமாக வால் பகுதியில் அமர்ந்திருந்த 2 ஊழியர்களும் உயிர் தப்பி உள்ளனர் என விமான போக்குவரத்து துறை நிபுணர்கள் தெரிவித்தனர்.