கனடாவின் நார்த் யார்க்கில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தில் 60 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மதியம் 4 மணியளவில் டான் மில்ஸ் சாலை மற்றும் ரோஷெஃபார்ட் டிரைவ் சந்திப்பில் அமைந்துள்ள வீட்டில் நடைபெற்றதாக டொரொண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த டொரொண்டோ தீயணைப்பு சேவையினரால் உடனடி மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் முதல்கட்ட தேடலின் போது, வீட்டின் உள்ளே இருந்து அந்த நபரை மீட்டனர். உடனடியாக வெளியே கொண்டு வரப்பட்ட போதும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக டொரொண்டோ தீயணைப்பு சேவையின் தலைவர் ஜிம் ஜெசப் உறுதிப்படுத்தினார். “தந்தையர் தினமான இந்நாளில், இந்த சோகமான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டொரொண்டோ தீயணைப்பு, காவல் மற்றும் மருத்துவ உதவி சேவைகள் சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கும் நெருங்கியவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார். தீயை கட்டுப்படுத்தியதாகவும், சம்பவத்தின்போது வீட்டில் வேறு யாரும் இல்லையெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தீயணைப்பு வீரர் ஒருவருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் தற்போது ஆபத்தின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிபத்துக்கான காரணம், அதன் தோற்றம் மற்றும் சம்பவ சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நபர் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.