மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், மேலூர் முல்லைப் பெரியாறு ஒரு போக பாசன விவசாயப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் மேலூர் பகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மேலூர் முல்லைப் பெரியாறு, ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம், பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து மதுரை தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று நடத்தினர்.
போராட்டத்துக்காக பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மேலூரை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் டிராக்டர், குட்டியானை உள்ளிட்ட வாகனங்களிலும், நடைபயணமாகவும் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் இன்று காலை 10 மணியளவில் கூடினர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மதுரைக்கு புறப்பட்டனர். சுங்கச்சாவடியில் பேரணி புறப்பட்டபோது அங்கு குவிந்திருந்த போலீஸார் மக்களை தடுத்தனர். பொதுமக்கள் மறுத்ததால் போலீஸாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.