யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைக்குமாறும், கடவை காப்பாளரை பணியில் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இணுவில் பகுதியில் நேற்று (14) மாலை புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த பொலிஸாரிடம் அப்பகுதியில் நிரந்தர புகையிரத கடவை காப்பாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததுடன் இதற்கு முன்னரும் குறித்த பகுதியில் விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
புகையிரத கடவை பாதுகாப்பு கதவு இருந்தபோதும் கடவை காப்பாளர் இருப்பதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் புகையிரதம் கடந்து செல்லும் போது வீதி மூடப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சமிக்ஞை விளக்குகள், எச்சரிக்கை மணி, எதுவுமே அற்ற ஒரு புகையிரத வீதிக்கடவையாக இது காணப்படுகிறது.
ஆகவே இது தொடர்பில் உரிய தரப்புக்கள் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழில் புகையிரதத்துடன் வான் மோதி விபத்து ; இருவர் மரணம் | Thedipaar News