கேப்பாபிலவில் நில உரிமை போராட்டம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக இன்றைய தினம் (01.05.2026) காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை வாழ்வாதாரமாக நம்பியிருந்த கேப்பாபிலவு மக்கள், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் துறைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இன்றைய தொழிலாளர் தினத்தன்று குறித்த போராட்டமானது கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டதனை தொடர்ந்து பிரதான வீதி வழியாக பேரணியாக வருகை தந்து இராணுவ படைத்தலைமையகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கேப்பாபிலவு மக்களினுடைய 55 குடும்பங்களின் 59.5 ஏக்கர் மக்கள் குடியிருப்பு காணியும், இராணுவ வசம் உள்ள மிகுதி மொத்தமாக 171 ஏக்கர் காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

குறித்த போராட்டத்தின் போது இராணுவமே எமது பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறு, நீதி எங்கே நீதி எங்கே? , ஜனநாயக நாடா அல்லது இராணுவ ஆட்சியா?, முகாம்களை மூடு நிலங்களை விடு , பாதுகாப்பு என்ற பெயரில் பறிக்காதே தமிழர் நிலத்தை, விவசாய நிலம் இராணுவத்திற்கு எதற்கு? , ஏழை மக்களின் வயிற்றில் அடிக்காதே, எமது வாழ்விடம் எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது போராட்ட இடத்தில் பெருமளவான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

Related Posts